ஈஸ்வரி - குறுந்தொகையில் மலர்கள்
சங்க இலக்கியங்களில் நற்றிணை, குறுந்தொகை இரண்டும் ஆரம்பகால நூல்களாக கொள்ளப்படுகிறது. சங்க இலக்கியத்தின் நுழைவாயிலாக நாம் குறுந்தொகையை காணலாம். குறுந்தொகையில் உள்ள பெரும்பாலான பாடல்கள் ஏதோ ஒரு இயற்கை சூழலையோ, காட்சியையோ, உவமைகளையோ குறிப்பதாகவே இருக்கும். உ.வே.சா வின் குறுந்தொகை உரையில் 20-30 பக்கங்கள் வரை குறுந்தொகையில் வரும் மரங்கள், விலங்குகள், பறவைகள் பெயர்களும் விளக்கங்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. இயற்கை சூழலோடு அந்த பாடல்களின் உணர்வு நிலைகளை நாம் உணர்ந்து கொள்வதன் மூலமாக நாம் அடையும் சித்திரமே வேறு ஓன்று தான். அந்த வகையில் குறுந்தொகையில் மலர்கள் பற்றிய ஒரு சில பாடல்களை இங்கு காணலாம்.
1) பாடல் – 188 – நொச்சி பூ
கொன்ஊர் துஞ்சினும், யாம் துஞ்சலமே-
எம்இல் அயலது ஏழில் உம்பர்,
மயில்அடி இலைய மாக்குரல் நொச்சி
அணிமிகு மென்கொம்பு ஊழ்த்த
மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே.
ஊரில் உள்ள அனைவரும் தூங்கினர். எம் வீட்டின் அருகிலுள்ள ஏழில் மலையில், மயிலின் கால்போன்ற இலைகளை உடைய பெரிய பூங்கொத்துகளுடைய நொச்சி மரத்தின், அழகிய பூங்கொத்துகள் உதிர்த்த நொச்சி மலர்களின் ஓசையைக் கேட்டுக் கொண்டே நான் தூங்காமல் இருக்கிறேன்.
2) பாடல் – 122 – குண்டு ஆம்பல்
பைங்காற் கொக்கின் புன்புறத்தன்ன
குண்டுநீர் ஆம்பலும் கூம்பின; இனியே
வந்தன்று, வாழியோ, மாலை!
ஒருதான் அன்றே; கங்குலும் உடைத்தே!
பசிய கால்களையுடை கொக்கின் சிறிய பின்பக்கத்தை போன்ற, ஆழமான நீர் நிலைகளில் உள்ள ஆம்பல் பூக்களும் குவிந்தன. மாலையும் வந்தது. அது வாழ்க! இந்த மாலை மட்டும் தனியே இல்லை. தன் பின் வரும் இரவையும் உடையது.
3) பாடல் – 98 – பீர்க்கம் பூ
இன்னள் ஆயினள் நன்னுதல் என்று,
அவர்த் துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே,
நன்றுமன் வாழி - தோழி - நம்படப்பை.
நீர்வார் பைம்புதர் கலித்த
மாரிப் பீரத்து அலர்சில கொண்டே.
நம் தோட்டத்திலுள்ள பச்சை புதலைகளை பற்றிக் கொண்டு படர்கின்ற, மழைக்காலத்தில் மலரும் பீர்க்கின் மலர்கள், சிலவற்றை எடுத்துச் சென்று தலைவரிடம் நெருங்கிச் சென்று, நல்ல நெற்றியுடைய தலைவி இந்த மலரைப் போன்று பசலையை அடைந்தாள் என்று சொல்வாயேயானால் மிக்க உதவியாயிருக்கும்.
4) பாடல் – 30 – குவளை
கேட்டிசின் வாழி - தோழி ! அல்கல்,
பொய்வலாளன் மெய்உற மரீஇய
வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட ஏற்று எழுந்து,
அமளி தைவந்தனனே; குவளை
வண்டுபடு மலரின் சாஅய்த்
தமியென்; மன்ற அளியென் யானே!
தோழி கேட்பாயாக கேட்பாயாக! இராக்காலத்தில் வருவேன் என்று கூறி வராத, பொய் கூறுதலிலே வள்ளவனாகிய தலைவன் என் உடம்புடன் அணைதலைப் போன்ற மெய்யே என்று எண்ணும் படியான பொய்கனாவிலே மயங்கி, துயிலிலிருந்து எழுந்து தலைவனை எண்ணி படுக்கையை தடவினேன். வண்டுகள் உழக்கிய குவளை மலரைப் போல நிலைகுலைந்து அவனைக் காணாது தனித்தவள் ஆகினேன். அத்தகைய நான் இரக்கங் கொள்ள உரியவளாவேன்.
5) பாடல் – 369 – வாகை
அத்த வாகை அமலைவால் நெற்று
அரிஆர் சிலம்பின், அரிசி ஆர்ப்பக்
கோடை தூக்கும் கானம்
செல்வாம் - தோழி! - நல்கினர் நமரே.
தோழி! தலைவர் நம்மீது அருள் செய்தார். அரு வழியாகிய பாலையில், அங்கே உள்ள வாகை மரத்தின் நெற்கள் வெண்ணிறமான தம் உள்ளிருக்கும் விதைகளோடு, (பரல்களை) மணிகளைக் கொண்ட சிலம்பு போல், ஒலி எழுப்பும் மேல்காற்று அலைகின்ற பாலைநிலத்தில் செல்வோம்.
6) பாடல் – 85 – கரும்பின் வெள்ளை பூ
யாரினும் இனியன்; பேர்அன் பினனே –
உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல்
சூல்முதிர் பேடைக்கு ஈனில் இழைஇயர்,
தேம்பொதிக் கொண்ட தீம்கழைக் கரும்பின்
நாறா வெண்பூக் கொழுதும்
யாணர் ஊரன் பாணன் வாயே.
ஊரிலே இருக்கும் ஊர்க்குருவியின் துள்ளல் நடையுள்ள சேவல் (ஆண் பறவை) சூல் முதிர் பேடை (பெண் பறவை) முட்டை இடுவதற்குரிய இடத்தில், இனிய சாறு பொதிலைக் கொண்ட கரும்பின், மணம் வீசாத வெண்மலரைக் கோதி எடுக்கும், ஊரைச் சேர்ந்த தலைவன் இவ்வாறே, இனியன், பேரன்பினன் என்பது பாணர் வாய்மொழி மட்டுமே ஆகும் .
7) பாடல் – 265 - காந்தள்
காந்தள்அம் கொழுமுகை, காவல் செல்லாது,
வண்டுவாய் திறக்கும் பொழுதில், பண்டும்
தாம்அறி செம்மைச் சான்றோர்க் கண்ட
கடன்அறி மாக்கள் போல, இடன்விட்டு,
இதழ்தளை அவிழ்ந்த ஏகல் வெற்பன்
நன்னர் நெஞ்சத்தன் - தோழி! - நின்நிலை
யான்தனக்கு உரைத்தனென் ஆக
தான் நாணினன், இஃது ஆகா வாறே.
காந்தளின் அழகும், செழுமையும் கொண்ட அரும்பினை தானாக மலரும் வரை காத்திருக்காமல் வண்டு சென்று பாட்டிசைத்து நிற்கும். அப்பொழுதில்,
தாம் அறிந்த நடுநிலையான சான்றோரை கண்ட, அவரை எதிர்கொண்டு செய்ய வேண்டியவற்றை அறிந்த மனிதரைப் போல, அவ்வண்டிற்குத் தான் தேன் உண்ணுவதற்கு இடம் விட்டு தன் இதழ்கள் விரிந்து கொடுக்கும். அத்தகைய மலர்களை உடைய தலைவனிடம் நின் நிலைமை உரைத்தேன். அவன் நாணம் அடைந்து இவ்வாறு இனி ஆகாது என்று கூறினான்.
8) பாடல் – 61 – கொன்றை பூ
மடவ மன்ற, தடவுநிலைக் கொன்றை -
கல்பிறங்கு அத்தம் சென்றோர் கூறிய
பருவம் வாரா அளவை, நெரிதரக்
கொம்புசேர் கொடிஇணர் ஊழ்த்த
வம்ப மாரியைக் கார்என மதித்தே.
கற்கள் விளங்கும் கடினமான பாலை வழி சென்ற தலைவன் கார் பருவத்திலே வருவான் என்று கூறி வாராத நிலையில், பருவம் அல்லா காலத்து பெய்யும் மழையினை கார்காலம் என்று எண்ணி, நெருங்கிய சிறு கொம்புகளில் ஒழுங்காக பூத்த பூங்கொத்துக்களை உடைய பரந்த அடியையுடைய கொன்றை மரங்கள் பேதைமை உடையவையே.
9) பாடல் – 21 – கொன்றை பூ
வண்டுபடத் ததைந்த கொடிஇணர் இடையிடுபு.
பொன்செய் புனைஇழை கட்டிய மகளிர்
கதுப்பின் தோன்றும் புதுப் பூங் கொன்றைக்
கானம், 'கார்' எனக் கூறினும்,
யானோ தேறேன்; அவர்பொய் வழங்கலரே.
வண்டுகள் தேன் உண்ணுவதற்கு வருமாறு தழைகளின் இடையே, நீண்ட பொன்னால் புனைந்து செய்த அணிகலன்களை சுற்றிக் கோத்துகட்டிய மகளிரின் கூந்தலைப் போல விளங்கும் புதிய பூக்களுடைய கொன்றை மரங்களை உடைய காடு, கார்காலம் வந்தது என்று சொன்னாலும், நான் நம்பமாட்டேன். ஏனெனில் தலைவர் பொய் மொழியைக் கூறார்.
10) பாடல் – 62 – வெண் காந்தள்
கோடல், எதிர் முகைப் பசுவீ முல்லை,
நாறு இதழ்க் குவளையொடு இடையிடுபு விரைஇ
ஐது தொடை மாண்ட கோதை போல,
நறிய நல்லோள் மேனி
முறியினும் வாய்வது; முயங்கற்கும் இனிதே.
காந்தள் மலரையும், அரும்பிலிருந்து மலர்கின்ற முல்லை மலரையும், மணம் வீசும் குவளை மலரையும், இடையில் இட்டு கலந்து அழகாக தொடுத்து மாலையைப் போல நறுமணத்தை உடைய நம் தலைவியின் மேனி, தளிரை விடவும் சிறந்தது. தழுவுவதற்கும் இனிதானது.
11) பாடல் – 47 – வேங்கை பூ
கருங்கால் வேங்கை வீஉகு துறுகல்
இரும்புலிக் குருளையின் தோன்றும் காட்டிடை
எல்லி வருநர் களவிற்கு
நல்லை அல்லை -நெடு வெண்ணிலவே !
வலிமையான அடியை உடைய வேங்கை மரத்தின் மலர்கள் உதிர்ந்து கிடக்கும் குண்டு கல், பெரும்புலியின் குட்டியைப் போல் தோன்றும் காட்டின் நடுவிலே களவிற்கு வரும் தலைவனே, இந்த வெண்ணிலவு நல்லை அல்லை.
12) பாடல் – 1 – செங்காந்தள்
செங்களம் படக்கொன்று அவுணர்த் தேய்த்த
செங்கோல் அம்பின், செங்கோட்டு யானை
கழல்தொடி, சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக்காந் தட்டே
போர்களம் முழுவதும் குருதிச் சிவப்புறுமாறு எதிரிகளை கொன்று, அரக்கர்களை அழித்தவன். குருதியால் சிவப்புற்ற அம்புகளையும் எதிரிகளை கிழித்ததால் சிவப்புற்ற தந்தங்களை கொண்ட போர் களிற்றுகளையும், உழன்று கொண்டிருக்கும் வீர வளையல் உடையவன் முருகன். அவனின் இம்மலையானது குருதி நிற, காந்தள் மலர் குலைகளால் நிறைந்துள்ளது.
Comments
Post a Comment